பூரி ஜெகநாதர் கோவிலில் 1 வயது குழந்தைகள் அர்ச்சகர்களாக நியமனம்
- கோவிலில் உள்ள அறையில் அவர்களை பணியாளர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 18 வயதுக்கு பிறகுதான் கோவிலில் அவர்கள் சேவை செய்ய முடியும்.
பூரி ஜெகநாதர் கோவிலில் 1 வயதுக்குள் உள்ள 3 குழந்தைகள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அங்குள்ள பாரம்பரியத்தின்படி 10 மாத குழந்தையான பலதேப் தாஸ்மொகபத்ரா, 1 வயது குழந்தையான எகான்சு தாஸ்மொகபத்ரா மற்றும் அதே வயதுடைய மற்றொரு குழந்தை ஆகிய 3 குழந்தைகளும் பூரி ஜெகநாதர் கோவிலின் அதிகாரப்பூர்வ அர்ச்சகர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ரத யாத்திரையின்போது முக்கிய சடங்குகளை செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படும். கோவிலில் உள்ள அறையில் அவர்களை பணியாளர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக பூரி ஜெகநாதர் கோவிலின் நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-
தைதாபதி சேவகரின் குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ரத யாத்திரைக்கு 15 நாட்களுக்கு முன்பு எந்த நாளிலும் அவர்கள் இறைவனின் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது பாரம்பரியமாக நடைமுறையில் உள்ளது. 21 நாட்கள் நிரம்பிய குழந்தைகள் பணியாளர்களாக சேர தகுதி உடையவர்கள் ஆவர்.
ரத யாத்திரைக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தைகள் பணியில் நியமிக்கப்பட்டாலும், 18 வயதுக்கு பிறகுதான் கோவிலில் அவர்கள் சேவை செய்ய முடியும். அதுவரை அவர்கள் ரத யாத்திரை சேவையில் மட்டுமே ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.