குஜராத்தில் பரிதாபம்- காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் பலி
- நில உரிமையாளரின் வீட்டு அருகே அந்த தொழிலாளியின் 4 குழந்தைகள் உள்பட 7 குழந்தைகள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர்.
- கார் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், குழந்தைகளால் கதவை மீண்டும் திறக்கமுடியவில்லை.
மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2-ந்தேதி காலை அவர், தனது மனைவி மற்றும் சில தொழிலாளர்களுடன் விவசாய வேலைக்காக காலையிலேயே சென்று விட்டார். அவர்களை நிலத்தின் உரிமையாளரே அழைத்து சென்றார்.
நில உரிமையாளரின் வீட்டு அருகே அந்த தொழிலாளியின் 4 குழந்தைகள் உள்பட 7 குழந்தைகள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்ற காருக்குள், தொழிலாளியின் 4 குழந்தைகளும் ஏறி விளையாடினர். கார் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், குழந்தைகளால் கதவை மீண்டும் திறக்கமுடியவில்லை.
நீண்ட நேரம் பூட்டிய காருக்குள் இருந்த 4 குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த பகுதியில் யாரும் இல்லாததால் நடந்த விபரீதம் பற்றி யாருக்கும் தெரியாமல் போயிற்று. சிறிது நேரத்தில் குழந்தைகள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய தொழிலாளி தனது குழந்தைகளை தேடியபோது அவர்கள் காருக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் கார் கதவை உடைத்து குழந்தைகளின் உடல்களை மீட்டனர். பலியான 4 குழந்தைகளும் 2 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த சம்பவம் குறித்து அம்ரேலி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.