இந்தியா

இந்தியாவில் 44 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்: அதிர்ச்சி தகவல்

Published On 2023-07-16 02:39 GMT   |   Update On 2023-07-16 02:39 GMT
  • கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
  • குற்றப் பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

புதுடெல்லி :

இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, நாடு முழுவதும் உள்ள மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இந்தியா முழுவதும் 44 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

28 மாநில சட்டசபைகள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் 4,033 எம்.எல்.ஏ.க்களில் 4,001 பேரை இந்த ஆய்வு உள்ளடக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 1,136 எம்.எல்.ஏ.க்கள் (28 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

அதிகபட்சமாக கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதேபோல், பீகாரில் 242 எம்.எல்.ஏ.க்களில் 161 பேர் (67 சதவீதம்), டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் (63 சதவீதம்), மராட்டியத்தில் 284 எம்.எல்.ஏ.க்களில் 175 பேர் (62 சதவீதம்), தெலுங்கானாவில் 118 எம்.எல்.ஏ.க்களில் 72 பேர் (61 சதவீதம்), தமிழகத்தில் 224 எம்.எல்.ஏ.க்களில் 134 பேர் (60 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், அவர்களில் 14 பேர் மீது கற்பழிப்பு வழக்கு உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. குற்றப் பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி மாநில சட்டசபைகளில் ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16.36 கோடியாகவும், குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் சொத்து மதிப்பு ரூ.11.45 கோடியாகவும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

Tags:    

Similar News