இந்தியா

முதல் மந்திரிசபை கூட்டத்தில் 5 உத்தரவாத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: டி.கே.சிவக்குமார்

Published On 2023-05-20 03:48 GMT   |   Update On 2023-05-20 03:48 GMT
  • எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம்.
  • நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

பெங்களூரு :

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி புறப்படுவதற்கு முன்பு டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க நான், சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் டெல்லி செல்கிறோம். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து முதல்கட்ட மந்திரிசபை அமைப்பது குறித்து முடிவு எடுக்க உள்ளோம். முதலில் நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிப்போம். புதிய மந்திரிகள் யார் என்பதை நாங்கள் விரைவில் அறிவிப்போம். எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம். யூகங்களுக்கு இடம் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். எங்களின் முதல் மந்திரிசபை கூட்டத்தில் 5 உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

எங்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். விழாவில் பங்கேற்க வருகிறவர்கள் விழாவுக்கு சற்று முன்னதாகவே வந்துவிட வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்காமல் இருக்கலாம். அதே போல் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

உத்தரவார திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதாவது விதிக்கப்படுமா?, என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் முடிவு எடுத்ததும் அதுகுறித்து உங்களுக்கு தெரிவிக்கிறோம். ஆனால் நாங்கள் சொன்னபடி நடந்து கொள்வோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

அவர் டெல்லி புறப்படும் முன்பு கன்டீரவா அரங்கத்திற்கு நேரில் வந்து விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றார்.

Tags:    

Similar News