இந்தியா

பத்மநாப சுவாமி கோவில் விழாவுக்காக 5 மணி நேரம் விமானங்கள் நிறுத்தம்- திருவனந்தபுரம் விமான நிலையம் அறிவிப்பு

Published On 2024-11-03 02:41 GMT   |   Update On 2024-11-03 02:41 GMT
  • 1932-ல் விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த சடங்கு தொடர்கிறது.
  • ஆண்டுக்கு இரு முறை விமான இயக்கத்தை நிறுத்தி வைத்தும், அட்டவணையை மாற்றியமைத்தும் வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் அருகே அமைந்து உள்ளது. இந்த கோவில் புனித நிகழ்வுக்காக ஆண்டுக்கு 2 முறை இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படுகிறது.

அதாவது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரும் 'ஐப்பசி ஆறாட்டு' மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வரும் பங்குனி விழாவுக்காக விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

அந்தவகையில் பத்மநாப சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி 'ஐப்பசி ஆறாட்டு' விழா நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து சாமி சிலைகளை சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று அங்கு ஆறாட்டு நிகழ்ச்சி (புனித குளியல்) நடத்தப்படுகிறது.

இந்த சாமி ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையை கடந்து கடற்கரைக்கு செல்லும். எனவே அதற்காக விமான நிலையத்தில் விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம் ஆகும்.

அதன்படி இந்த ஆண்டும் வருகிற 9-ந்தேதி 5 மணி நேரம் விமான இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக விமான நிலையம் அறிவித்து உள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விமான இயக்க நிறுத்தம் அமலில் இருக்கும் என கூறியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பத்மநாப சுவாமி கோவில் ஊர்வலம் கடந்து செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஓடுபாதை ஆண்டுதோறும் 2 முறை மூடப்படுகிறது. சிலைகள் புனித நீராடுவதற்காக சங்குமுகம் கடற்கரையை அடைய தற்போதைய ஓடுபாதையில் ஊர்வலம் செல்லும் நடைமுறை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

1932-ல் விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த சடங்கு தொடர்கிறது. இதற்காக ஆண்டுக்கு இரு முறை விமான இயக்கத்தை நிறுத்தி வைத்தும், அட்டவணையை மாற்றியமைத்தும் வருகிறது.

இது இந்த பிராந்தியத்தின் கலாசாரம் மற்றும் மரபுகள் அப்படியே தொடர்வதை உறுதி செய்கிறது.

இவ்வாறு விமான நிலையத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த விமான நிலையம் கட்டப்பட்டபோது, இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 363 நாட்கள் மக்களுக்காகவும், 2 நாட்கள் பத்மநாப சுவாமிக்காகவும் திறந்திருக்கும் என அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் கூறியிருந்தார்.

அதன்படி இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. மன்னர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறைகள் தற்போது அதானி குழுமம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஏற்றபிறகும் கூட தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News