ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டது எதிரொலி: அசாம்-மேகாலயா எல்லையில் பதற்றம்
- 7 மாவட்டங்களில் இணைய சேவை 48 மணி நேரத்திற்கு முடக்கம்
- மோதல் நடந்த இடத்தில் 144வது பிரிவின் கீழ் கட்டுப்பாடுகள் விதிப்பு.
கவுகாத்தி:
அசாம் எல்லையையொட்டி உள்ள மேகாலயா மாநில ஜெய்ன்டியா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை அசாம் வனக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து முக்ரோக் கிராமத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் வனத்துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர். அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இந்த கலவரத்தில் முக்ரோக் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பழங்குடி கிராம மக்கள் மற்றும் அசாமைச் சேர்ந்த ஒரு வனக் காவலர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இரு மாநில எல்லையில் நிகழ்ந்த இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அசாம்-மேகாலயா எல்லையில் நிலைமை தொடர்ந்து பதற்றமாக உள்ள போதிலும்,பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 144வது பிரிவின் கீழ் மோதல் நடந்த இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.