இந்தியா

காங்கிரஸ் தலைவர் கார்கே நாளை முதல் சூறாவளி பயணம்- பாரதிய ஜனதாவை வீழ்த்த தீவிரம்

Published On 2023-08-12 05:58 GMT   |   Update On 2023-08-12 05:58 GMT
  • சத்தீஷ்கர் தலைநகர் ராய்பூரில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பேரணியில் அவர் பங்கேற்கிறார்.
  • மாநில காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி:

சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடக்கின்றன. தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகின்றன.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக அமையும் என கருதப்படுவதால் இதில் பலத்தை நிரூபிப்பதோடு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கவும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் கட்சி சார்பாக 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இது தொடர்பாக முத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 5 மாநில தேர்தல் பிரசாரத்தை சத்தீஷ்கரில் இருந்து தொடங்குகிறார். சத்தீஷ்கர் தலைநகர் ராய்பூரில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பேரணியில் அவர் பங்கேற்கிறார்.

அதை தொடர்ந்து 18-ந்தேதி தெலுங்கானாவிலும், 22-ந்தேதி மத்திய பிரதேசத்தின் போபாலிலும், 23-ந்தேதி ராஜஸ்தானின் ஜெய்பூரிலும் நடைபெறும் பேரணிகளில் அவர் கலந்துகொள்கிறார். சுற்றுப் பயணத்தின்போது மல்லிகார்ஜூன கார்கே அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

கர்நாடகா, இமாசல பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி கையாண்ட யுக்தியை 5 மாநில தேர்தலிலும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதற்காக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News