திருமண விருந்தில் ரசகுல்லா சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலம் பாதிப்பு- போலீசார் தீவிர விசாரணை
- திருமண விழாவில் சுமார் 200 பேர் உணவு சாப்பிட்ட நிலையில் 70 பேருக்கு உடல் நலம் பாதிப்பு.
- சிலரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்னோஜ் கிராமத்தில் நடைபெற்ற திருமண விருந்து ஒன்றில் சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 70 பேருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமண விழாவில் சுமார் 200 பேர் உணவு சாப்பிட்ட நிலையில் அங்கு பரிமாறப்பட்ட ரசகுல்லா இனிப்பை சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இதில், அர்சூ (1), யூசுப் (2), ஷிஃபா (4), அஸ்ரா (5), சாசியா (7), இர்பான் கான் (48), சுல்தான் (52), மற்றும் ரியாசுதீன் (55) ஆகியோரின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் சக்தி பாசு கூறுகையில், "மாவட்ட மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளின் உடல் நிலை சீராக இருக்கிறது. சிலர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.