இந்தியா

வயதோ 78.. வாலிபர் போல் சுறுசுறுப்பு: ஆங்கிலம் கற்க 3 கி.மீ. பள்ளிக்கு செல்லும் முதியவர்

Published On 2023-08-03 09:37 GMT   |   Update On 2023-08-03 09:37 GMT
  • ஒரே மகனான இவர் வயல் வேலைகளில் ஈடுபட்டு தாயை காப்பாற்றி வந்தார்
  • இவர் மிசோ மொழியில் ஆற்றல் படைத்தவர்

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலம் மிசோரம்.

இங்குள்ள சம்பாய் மாவட்டத்தில் உள்ள ஹ்ருவாய்கான் கிராமத்தை சேர்ந்த முதியவர் லால்ரிங்தாரா (78).

இந்தோ-மியான்மர் (அப்போதைய பர்மா) எல்லையில் குவாங்லெங் கிராமத்தில் 1945ல் பிறந்த லால்ரிங்தாரா, தனது சிறு வயதிலேயே தந்தை இறந்ததால், 2ம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தி விட்டார். மேலும், ஒரே மகனான இவர் வயல் வேலைகளில் ஈடுபட்டு தாயை காப்பாற்றி வந்தார்.

வறுமையினால் படிப்பை தொடர முடியாவிட்டாலும், படிப்பின் மீதான ஆர்வம் அவருக்கு குறையவில்லை. குறிப்பாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் மற்றும் படிக்கவும் விரும்பினார். மிசோ மொழியில் ஆற்றல் படைத்தவராய் இருந்தாலும், அவருக்கு ஆங்கில அறிவு போதுமானதாக இல்லை.

இதனால் தன் வயதை பொருட்படுத்தாமல் ஹ்ருவாய்கான் கிராமத்தில் உள்ள ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA) உயர்நிலை பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

பிற சிறுவர்களை போல சீருடை அணிந்து, புத்தகங்களை சுமந்து, 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும் நடந்து சென்று கல்வி கற்கிறார்.

ஆங்கிலத்தில் விண்ணப்பங்களை எழுதவும், ஆங்கில தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளை புரிந்துகொள்வதையுமே தனது முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறார்.

"லால்ரிங்தாரா, பிற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு உதாரணமாக திகழ்கிறார். கற்றலில் ஆர்வமுள்ள அவர் பாராட்டுக்குரியவர்" என அவரை குறித்து அந்த நடுநிலைப் பள்ளியின் பொறுப்பாளர் கருத்து தெரிவித்தார்.

Tags:    

Similar News