கேரளாவில் 5 ஆண்டுகளில் 81 போலீசார் தற்கொலை
- காவலர் குடியிருப்பில் சிவில் போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
- கடந்த 5 மாதங்களாக பூந்துறை பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக போலீஸ் துறையில் பணியில் இருக்கும் பலர் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். இந்த தகவல் போலீசாரிடமும் மாநில அரசிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவர்கள் தற்கொலை முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
இந்த நிலையில் காவலர் குடியிருப்பில் சிவில் போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம் மாநகர போக்குவரத்து அமலாக்க (வடக்கு) பிரிவில் சிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மதனகுமார். பரஸ்சலா பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 5 மாதங்களாக பூந்துறை பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அங்கு தான் மதனகுமார், தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் 2 நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் 81 போலீசார் தற்கொலை செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரிடம் அதிகரித்து வரும் தற்கொலை போக்குகள் மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சனையில் போலீஸ் அதிகாரிகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன