"ஜிம்"மில் உடற்பயிற்சி செய்யும் 89 வயது டாக்டர்
- பயிற்சியாளர் ஒருவரின் உதவி மூலம் வீட்டிலேயே பயிற்சி செய்தார்.
- ஜிம் உடற்பயிற்சி செய்வதன் காரணமாக 89 வயதிலும் தடையின்றி நடக்கக்கூடிய சுதந்திரத்தை அனுபவிப்பதாக டாக்டர் சபாபதி தெரிவித்திருக்கிறார்.
திருவனந்தபுரம்:
நோயில்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் அவசியம் தேவை. இதனை அறிந்தவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலர் தள்ளாத வயதிலும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.
இதன்மூலம் வயதான பிறகும் உற்சாகமாக நடைபோடும் சிலரை நாம் பார்த்திருப்போம். அது போன்று கேரள மாநிலத்தில் 89 வயதில் முதியவர் ஒருவர், ஜிம் உடற்பயிற்சியை செய்து வருகிறார். அவர் எர்ணாகுளத்தை சேர்ந்த சபாபதி ஆவார்.
மருத்துவரான இவர் எர்ணாகுளத்தில் மருத்துவமனை வைத்திருக்கிறார். நடைப்பயிற்சியை வழக்கமாக செய்துவந்த அவர், வயது முதிர்வு காரணமாக அதில் சில சிக்கல்களை எதிர்கொண்டார். இதனால் பயிற்சியாளர் ஒருவரின் உதவி மூலம் வீட்டிலேயே பயிற்சி செய்தார்.
இதன் காரணமாக நடைப்பயிற்சி செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட்டார். இதையடுத்து ஜிம்மில் சேர்ந்து தீவிர உடற்பயிற்சி செய்ய சபாபதி முடிவு செய்தார். அதன்படி கடவந்திரா பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் முன்பு சேர்ந்தார்.
அங்கு எடை பயிற்சி, செயல்பாட்டு பயிற்சி, சம நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்கிறார். சபாபதி அதிக மன உறுதியுடன் இருந்ததால் அனைத்துவித உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறார்.
87 வயது முதியவர் உற்சாகமாக உடற்பயிற்சி செய்வதை, அவர் பயிற்சி செய்யும் ஜிம்மை சேர்ந்த இளைஞர்கள் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். ஜிம் உடற்பயிற்சி செய்வதன் காரணமாக 89 வயதிலும் தடையின்றி நடக்கக்கூடிய சுதந்திரத்தை அனுபவிப்பதாக டாக்டர் சபாபதி தெரிவித்திருக்கிறார்.
மருத்துவர் சபாபதியின் இந்த செயல்பாடு முதியோருக்கான ஜிம் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது என்றால் மிகையல்ல.