null
பெற்றோரின் அலட்சியத்தால் காருக்குள் சிக்கி 3 வயது சிறுமி மூச்சுத்திணறி பலி
- ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 3 வயது பெண் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பிரதீப் நாகர் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஜோரவார்புரா கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 3 வயது பெண் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜாதான் மாநிலம் கோட்டா நகருக்கு அருகில் உள்ள ஜோரவார்புரா என்ற கிராமத்தில் நேற்று (மே 15) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரதீப் நாகர் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஜோரவார்புரா கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார். அவரின் மனைவியும் மூத்த மகளும் காரிலிருந்து இறங்கி அருகில் இருந்த பூங்காவுக்கு சென்ற நிலையில், பிரதீப், தனது இளைய மகள் கோர்விகா சாகர் மனைவியுடன் இறங்கி சென்றுவிட்டதாக கருதி மகள் உள்ளே இருப்பதை அறியாமல் காரை லாக் செய்துவிட்டு பூங்காவுக்கு சென்றுள்ளார்.
அவரின் மனைவியோ மகள் கணவருடன் வந்துகொண்டிருக்கிறாள் என்று நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார். இதனிடையே சுமார் 2 மணி நேரம் கழித்தே குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் உணர்ந்து காருக்கு சென்று பார்க்கையில், குழந்தை மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் காருக்குள் இருந்துள்ளது. உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர்கள் தூக்கிச்சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் காவல்துறையினர், பெற்றோர்கள் குழந்தையின் பிரேத பரிசோதனை செய்யவும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.