விலை உயர்ந்த செல்போனை பள்ளத்தாக்கில் வீசிய குரங்கு: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்பு அதிகாரி
- பள்ளத்தாக்கு மிகவும் சரிவாக இருந்ததால் யாரும் இறங்க முன் வரவில்லை.
- பிரத்யேக மலையேறும் கருவியை பயன்படுத்தி 60 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு பகுதியுள்ள பிலாத்தோட்டம் பகுதிக்கு ஜாசிம் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்தார். அப்போது அங்குள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தனது நண்பர்களுடன் செல்போனில் செல்பி எடுத்தார்.
அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு குரங்கு, ஜாசிமின் விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் உதவியை நாடினார். ஆனால் அந்த பள்ளத்தாக்கு மிகவும் சரிவாக இருந்ததால் யாரும் இறங்க முன் வரவில்லை.
இதையடுத்து அவர் தீயணைப்பு துறையினரின் உதவியை நாடினார். ஆனால் அவர்களோ, மனித உயிர்களை காப்பாற்றவே முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபடு வோம் என்று கூறி வர மறுத்தனர்.
ஆனால் தனது செல்போனின் விலை ரூ.65 ஆயிரம் எனவும், அதில் பல ஆவணங்கள் இருப்பதாகவும், ஆகவே தனது செல்போனை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து தீயணைப்பு அதிகாரி ஜித்தன் குமார் நேரடியாக களத்தில் இறங்கினார்.
அவர் பிரத்யேக மலையேறும் கருவியை பயன்படுத்தி 60 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். மிகவும் அபாயகரமான அந்த பள்ளத்தாக்கில் தீயணைப்பு அதிகாரியே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.