இந்தியா

ஒரே நாடு, ஒரே மொழி என பேசுகிற மன்னருக்கு 2 நாக்குகள் உள்ளன- பிரகாஷ்ராஜ்

Published On 2024-04-23 09:47 GMT   |   Update On 2024-04-23 10:09 GMT
  • இதே வார்த்தையை மோடி தமிழ்நாட்டில் இருக்கும் போது பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்த பருப்பு இங்கே வேகாது.
  • மோடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டுமா? திருடனை பற்றிய புகாரை இன்னொரு திருடனுக்கு நீங்கள் கொடுப்பீர்களா?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில் மோடியின் இந்த பேச்சு தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி கொடுத்துள்ளார். அதில்,

மல்லிப்பூவில் இருந்து எப்படி அதன் மணம் வெளியே வருமோ அதே போல் தான் மன்னரின் (மோடி ) வாயிலிருந்து அவரின் பேச்சிலிருந்து அவரது அசிங்கம் வெளியே வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை திரித்து அதை முஸ்லிம்கள் என பேசும் போதே மோடியின் அஜெண்டா நமக்கு தெரிகிறது.

இதே வார்த்தையை மோடி தமிழ்நாட்டில் இருக்கும் போது பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்த பருப்பு இங்கே வேகாது. ஆனால் உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் அது வேகும்.

ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மாதிரி... ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தர்மம் என்று பேசுகிற மன்னருக்கு 2 நாக்குகள் உள்ளன.

ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொன்று பேசி கொண்டு இருக்கிறது. இவை எல்லாம் நாம் தலைகுனிய வேண்டிய அசிங்கமான விஷயம். இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

மோடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டுமா? திருடனை பற்றிய புகாரை இன்னொரு திருடனுக்கு நீங்கள் கொடுப்பீர்களா? ராமரின் படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள், சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அவர்கள் (தேர்தல் ஆணையம்) வாங்கப்பட்டுள்ளார்கள்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் சொல்வது தான் நடக்கும். எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது, யாரும் கேள்வி கேட்கக்கூடாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தர்மம், தேர்தலே கிடையாது" என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News