ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசினார்: மனைவி பிரிந்து சென்றதால் குழந்தைகளை விற்க முயன்ற வாலிபர்
- குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
போச்சையா மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் போச்சையா உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார் . அவரால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை.
இதனால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தனது மகன்களை விற்பனை செய்ய முடிவு செய்தார். அவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசி வந்தார் .
இது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் போச்சையா வீட்டிற்கு வந்தனர்.
அவரிடம் இருந்து 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழந்தைகள் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
போச்சயாவை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். குழந்தைகளை விற்றாலும் அல்லது வாங்கினாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தை இல்லாத பெற்றோர்கள் வழிகாட்டு முறைகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.