இரும்பு பெட்டியில் வைத்த ரூ.2 லட்சத்தை கரையான் அரித்தது- மகள் திருமணத்திற்கு சேர்த்ததாக விவசாயி கண்ணீர்
- அறியாமை காரணமாக நான் இப்படி இரும்பு பெட்டியில் பணத்தை சேமித்து நஷ்டம் அடைந்துவிட்டேன்.
- என்னுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்தவர் ஆதி மூலம் லக்ஷ்மணா. விவசாயி.
இவர் தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்வதற்காக சுமார் ரூ. 2 லட்சம் பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் பத்திரப்படுத்தி சேமித்து வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணம் மொத்தம் எவ்வளவு இருக்கிறது என்று எண்ணிப் பார்ப்பதற்காக இரும்பு பெட்டியைத் திறந்து பார்த்தார்.
அப்போது இரும்பு பெட்டியில் இருந்த பணம் கரையான் அரிக்கப்பட்டு துண்டு துண்டாக இருந்தது. இதை கண்ட ஆதி மூலம் லக்ஷ்மணா அதிர்ச்சடைந்தார்.
பெட்டியை தலைகீழாக கவிழ்த்துப் பார்த்த போது உள்ளே வைத்திருந்த சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை கரையான்கள் கடித்து துண்டு துண்டாக சேதப்படுத்தியிருந்தது தெரிய வந்தது.
இதனால் மனவேதனை அடைந்துள்ள ஆதிமூலம் லக்ஷ்மணா, அறியாமை காரணமாக நான் இப்படி இரும்பு பெட்டியில் பணத்தை சேமித்து நஷ்டம் அடைந்துவிட்டேன்.
என்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். என்னுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.