இந்தியா

ஒர்லி பொதுக்கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே பேசிய போது எடுத்தபடம்.


தாக்கரே குடும்பத்தின் மீதான மக்களின் அன்பை திருட முடியாது: ஆதித்ய தாக்கரே

Published On 2023-02-28 03:18 GMT   |   Update On 2023-02-28 03:18 GMT
  • ஏக்நாத் ஷிண்டேவால் கட்சியின் பெயர், சின்னத்தை தான் திருடமுடியும்
  • அலிபாபாவும், 40 திருடர்களும் நடத்தும் அரசாங்கம் இது

மும்பை :

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த வாரம் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரேவின் ஒர்லி தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார். பொதுக்கூட்டத்தில் குறைந்த அளவில் மட்டுமே தொண்டர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தொண்டர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒர்லியில் ஆதித்ய தாக்கரேவின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தொண்டாகள் திரளாக கலந்து கொண்டனர். உத்தவ் தாக்கரே அணியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் சாவந்த் எம்.பி., பாஸ்கர் ஜாதவ் எம்.எல்.ஏ., சுஷ்மா அந்தாரே, சச்சின் ஆஹிர் எம்.எல்.சி., சுனில் ஷிண்டே உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே பேசியதாவது:-

ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனாவின் பெயர், சின்னத்தை மட்டுமே திருட முடியும். ஆனால் மராட்டிய மற்றும் மும்பை மக்கள் எங்கள் (தாக்கரே) மீதும், சிவசேனாவின் மீதும் வைத்து உள்ள அன்பை திருடமுடியாது. இது சிவசேனாவுக்கான போராட்டம் அல்ல. ஜனநாயகம், அரசியல் அமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம். ஒற்றுமையுடன் இருந்து அவர்களுக்கு எதிராக போராடுவோம். நமக்கு வெற்றி கிடைக்கும்.

ஷிண்டே-பா.ஜனதா அரசு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் முன்பே கவிழும். இதுபற்றி தொழில் அதிபர்களுக்கு கூட தெரிந்து இருக்கிறது. அதனால் தான் மராட்டியத்தில் முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை.

அலிபாபாவும், 40 திருடர்களும் நடத்தும் அரசாங்கம் இது. ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் செய்யும் முறைகேடுகள் பற்றி அவர்களின் புதிய நண்பர்கள் (பா.ஜனதா) தான் எங்களுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இந்த அரசு கவிழ்ந்த பிறகு துரோகிகள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்வார்கள். அரசு கவிழ்ந்த பிறகு அவர்களின் தேவை பா.ஜனதாவுக்கு முடிந்துவிடும்.

சிவசேனாவின் சின்னம், பெயரை பறிக்க தான் துரோக எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தேவைப்பட்டனர். தற்போது ஆட்டம் முடிந்துவிட்டது. கட்சி பெயர், சின்னம் கிடைத்த பிறகு ஏக்நாத் ஷிண்டே, "தாக்கரே" பெயரும் வேண்டும் என டெல்லியிடம் கேட்டாலும் கேட்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News