ஐ.பி.எஸ். அதிகாரியை கரம் பிடிக்கும் பஞ்சாப் மந்திரி
- ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ்.
- மணப்பெண்ணான ஜோதி யாதவ், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்
சண்டிகார்:
பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார். அங்குள்ள கம்பீர்பூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெயின்ஸ் வக்கீல் ஆவார். கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி ஆனார். ஆம் ஆத்மியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். இவருக்கு தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணப்பெண்ணான ஜோதி யாதவ், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். இவர் அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இம்மாத இறுதியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.