இந்தியா

நீங்கள் மக்களின் பக்கமா? அல்லது மோடி அரசின் பக்கமா? காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி கேள்வி

Published On 2023-06-23 12:01 GMT   |   Update On 2023-06-23 16:16 GMT
  • கூட்டம் நிறைவடைந்த பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
  • இனி நடக்கும் எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக, பீகாரில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

டெல்லி அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது குறித்து ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது என்றே பேசப்பட்டது. ஆனால் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். கூட்டம் நிறைவடைந்த பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். ஆனால் செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை.

அதன்பின்னர் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில், டெல்லி அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தது. காங்கிரஸ் கட்சி டெல்லி மக்கள் பக்கம் இருக்கிறதா? அல்லது மோடி அரசின் பக்கம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுவதாகவும், இதுபற்றி காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அரசாணையை காங்கிரஸ் பகிரங்கமாக எதிர்க்கும் வரை, இனி நடக்கும் எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்றும் ஆம் ஆத்மி கட்சி குண்டைத் தூக்கி போட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்ற 16 கட்சிகளில் 12 கட்சிகள் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ளன. அதில் 11 கட்சிகள் அவசர சட்டத்தை எதிர்க்கின்றன.

Tags:    

Similar News