பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு - ஆம் ஆத்மி கட்சி வெற்றி
- பஞ்சாப் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
- இந்த நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
சண்டிகர்:
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பகவந்த் மான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே, தலா ரூ.25 கோடி வீதம் கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் அணுகினார்கள் என ஆம் ஆத்மி சில வாரங்களுக்கு முன் அதிரடி குற்றச்சாட்டாக கூறியது. பஞ்சாப்பில் அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் குற்றச்சாட்டு கூறியது.
ஆபரேஷன் தாமரை திட்டம் நிறைவேறுவதற்காக அக்கட்சி முயற்சி செய்கிறது என்றும் கூறியது.
இதையடுத்து, பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படும் என பகவந்த் மான் தெரிவித்தார். இதற்கு கவர்னர் பன்வாரி லால் 2 நாட்களுக்கு பின் அனுமதி வழங்கினார். இதன்படி, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், பகவந்த் மானின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.
சபாநாயகர் குல்தர் சிங் சந்த்வான் குரல் வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு வெற்றி பெற்றது.