இந்தியா

தேர்தல் பிரசாரத்தில் 100 ரூபாய் கள்ளநோட்டு வினியோகம்- தொண்டர்கள் அதிர்ச்சி

Published On 2024-05-09 04:28 GMT   |   Update On 2024-05-09 04:28 GMT
  • பிரசாரம் முடிந்த பிறகு தன்னுடன் வந்தவர்களுக்கு வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
  • தேர்தல் பிரசாரத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.300 வழங்கிய வேட்பாளர்கள் தற்போது 500 ரூபாய் வழங்கி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திராவில் வாக்கு சேகரிப்பின் போது தங்களது பலத்தை காட்ட பணம் கொடுத்து ஆட்களை அழைத்து செல்கின்றனர்.

நந்தியாலா மாவட்டம் நந்தி கோட்கூரில் நேற்று அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தன்னுடன் தேர்தல் பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 தருவதாக அழைத்துச் சென்றுள்ளார். பிரசாரம் முடிந்த பிறகு தன்னுடன் வந்தவர்களுக்கு வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

வேட்பாளர் கொடுத்த ரூபாய் நோட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்தபோது அது கள்ளநோட்டு என தெரிய வந்தது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வேட்பாளரிடம் கேட்டபோது நான் ஒரிஜினல் நோட்டுகளை தான் கொடுத்தேன் என கூறினார்.

மேலும் சிலர் வேட்பாளர் கொடுத்தது கள்ள நோட்டு என தெரியாமல் கடையில் கொடுத்து மாற்றினர். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவருவதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்களை தாராளமாக விநியோகம் செய்து வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.300 வழங்கிய வேட்பாளர்கள் தற்போது 500 ரூபாய் வழங்கி வருகின்றனர்.

Tags:    

Similar News