இந்தியா

நடிகர் தர்ஷன் கைது.. பெங்களூருவில் 144 தடை உத்தரவு

Published On 2024-06-13 07:33 GMT   |   Update On 2024-06-13 07:33 GMT
  • ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்தி வந்து பெங்களூருவில் வைத்து கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசியதும் தெரிந்தது.
  • நடிகர் தர்ஷன், விஜயலட்சுமியை திருமணம் செய்த நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

பெங்களூரு:

கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன் (வயது 47). இவர் கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'காடீரா' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று வசூலை குவித்தது.

இவரது திரைப்படங்கள் வசூலை குவித்து வரும் நிலையில், இவர் கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தற்போது கொலை வழக்கு ஒன்றில் நடிகர் தர்ஷன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. அதன் அருகே கடந்த 9-ந் தேதி அன்று ஆண் பிணம் ஒன்று உடலில் காயங்களுடன் கிடந்தது. இதுபற்றி அருகில் உள்ள கட்டிடத்தின் காவலாளி காமாட்சிபாளையா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர்.

மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் போலீசார் 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அதாவது பிணமாக கிடந்தவர் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி ( 33) என்பதும், அவர் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்தது.

அதாவது கைதானவர்கள் வினய், மைசூருவை சேர்ந்த நாகராஜு, ஆர்.பி.சி. லே-அவுட்டை சேர்ந்த லட்சுமண், கிரிநகரை சேர்ந்த பிரதோஷ், கார்த்திக், கேசவ் மூர்த்தி, ஆர்.ஆர். நகரில் வசித்து வரும் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவை சேர்ந்த பவன், தீபக் குமார், மண்டியாவை சேர்ந்த நந்தேஷ், பெங்களூரு புறநகர் மாவட்டம் பன்னரகட்டாவை சேர்ந்த நிகில் நாயக், சித்ரதுர்கா டவுனை சேர்ந்த ராகவேந்திரா ஆகிய 11 பேர் என்பது தெரிந்தது.

மேலும் அவர்கள் தான் ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்தி வந்து பெங்களூருவில் வைத்து கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசியதும் தெரிந்தது.

அவர்கள் 11 பேரையும் நடிகர் தர்ஷன் தான் கூலிப்படையாக ஏவி கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும் அம்பலமாகி உள்ளது. அதாவது நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கவுடா(36) ஆவார். பவித்ரா கவுடாவும் நடிகை ஆவார். நடிகர் தர்ஷன், விஜயலட்சுமியை திருமணம் செய்த நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

அதுதொடர்பான விவகாரம் அவ்வப்போது வெடித்து வருகிறது. இந்த நிலையில் கொலையான ரேணுகாசாமி நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார். அவர், நடிகர் தர்ஷனுடன் நடிகை பவித்ரா கவுடா நெருங்கி பழகுவது தர்ஷனின் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவும், தர்ஷன் - அவருடைய மனைவி விஜயலட்சுமி இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிவு ஏற்படும் எனவும் நினைத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் அவர், நடிகை பவித்ரா கவுடாவை பற்றி சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி அவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாசமாக குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.

இதுபற்றி நடிகை பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகர் தர்ஷன், சித்ரதுர்கா மாவட்ட தர்ஷன் ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திராவை அழைத்து பேசி உள்ளார்.

அப்போது ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு அழைத்து வரும்படி தர்ஷன் கூறி உள்ளார். அதன்படி ராகவேந்திரா, சித்ரதுர்காவில் உள்ள வீட்டில் இருந்த ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு கடந்த 8-ந் தேதி இரவு காரில் அழைத்து வந்துள்ளார்.

பின்னர் ராஜராஜேஸ்வரி நகர் பட்டனகெரே பகுதியில் உள்ள வினய் என்பவருக்கு சொந்தமான பழைய கார் குடோன் பகுதிக்கு ரேணுகாசாமியை அழைத்து வந்துள்ளனர். அங்கு வைத்து ரேணுகாசாமியை ராகவேந்திரா உள்பட 11 பேரும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அவரது உடலில் ஆங்காங்கே சிகரெட்டால் சூடு வைத்தும், வாய் மற்றும் முகம் உள்பட உடலின் 15 இடங்களில் இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியும் உள்ளனர். இதில் ரேணுகாசாமி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தது தெரிந்தது. அவரை துடிக்க துடிக்க அவர்கள் சரமாரியாக அடித்தே கொன்றுள்ளனர்.

இதையடுத்து கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடிகர் தர்ஷனை, மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து காமாட்சிபாளையா போலீசார் நேற்று முன்தினம் காலையில் கைது செய்தனர். பின்னர் அவரை உடனடியாக பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நடிகை பவித்ரா கவுடாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. பின்னர் கைதான நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல் நிலையத்தின் 200 மீட்டர் எல்லைக்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News