உத்தவ் தாக்கரேவுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
- ரஜினிகாந்தை உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
- ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார்.
மும்பை :
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தனது மனைவி லதாவுடன் மும்பை வந்துள்ள ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார். போட்டியின் போது மைதானத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.
ரஜினிகாந்துடன் மராட்டிய கவர்னர் ரமேஷ் பயஸ், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டவர்களும் போட்டியை பார்த்து ரசித்தனர்.
இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை திடீரென சந்தித்து பேசினார். ரஜினிகாந்தை உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இது தொடர்பாக ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் பதிவில், ''ரஜினிகாந்த் மீண்டும் மாதோஸ்ரீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி'' என தெரிவித்து உள்ளார்.
ரஜினிகாந்த், உத்தவ் தாக்கரே சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதை நிமித்தமானது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாதோஸ்ரீயில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.