125 நாட்கள் பயணத்தை கடந்து நாளை இலக்கை அடைகிறது ஆதித்யா எல்-1
- எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
- லாக்ராஞ்சியன் புள்ளி எல்-1 யைச் சுற்றி ஒரு ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை 125 நாட்கள் பயணித்த பிறகு, சூரியனுக்கு மிக அருகில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி எல்-1 யைச் சுற்றி ஒரு ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே ஆதித்யா-எல்1 சூரியனின் முழு-வட்டுப் படங்களை எடுத்து இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியன் தொடர்பான படங்களை எடுத்து இந்த விண்கலம் அனுப்ப இருக்கிறது. இந்தநிலையில் தற்போது ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது.
எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற ஜனவரி 6-ந்தேதி (நாளை) அன்று ஆதித்யா எல்-1 புள்ளியில் நுழைகிறது.
குறிப்பாக, ஜனவரி 7-ந்தேதிக்குள் இறுதி கட்டப்பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள லக்ரேஞ்சியன்-1 புள்ளியில் இருந்து, சூரியனின் மேற்புற அடுக்குகளான குரோமோஸ்பியர், போட்டோஸ்பியர் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.