விசாகப்பட்டினம் கடற்கரையில் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி
- ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர்.
திருப்பதி:
கடற்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 4-ந் தேதி சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மிச்சாங் புயல் காரணமாக 4-ந் தேதி நடைபெற இருந்த சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நேற்று மாலை நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விமானப்படை பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் சாகசம் செய்தனர். விண்ணில் விமானத்தில் பறந்து தீப்பிழம்பை கக்கிய படியும், விமானங்கள் குறுக்கு நெடுக்காக சென்றும், வண்ணப் பொடிகளைத் தூவியும் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.
இதேபோல் கடற்படை வீரர்கள் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் சாகசங்களை செய்து காண்பித்தனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர்.