சவுதியில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவை சேர்ந்தவர் நாளை விடுதலை
- அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
- அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழா பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். ரியாத்தில் ஹவுஸ் டிரைவர் விசாவில் சென்று வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு 26 வயது.
அங்கு ஒரு தம்பதியின் நடக்கமுடியாத நிலையில் இருந்த 15 வயது மாற்றுத்திறனாளி மகனை பராமரித்து வந்தார். இந்நிலையில் காரில் சென்றபோது அந்த சிறுவனை அப்துல் ரஹீம் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனடிப்படையில் அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டார்.
சிறுவனின் கொலை தவறுதலாக நடந்தது என்று அப்துல் ரஹீம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர் சவுதி அரேபியா சிறையில் அப்துல் ரஹீம் அடைக்கப் பட்டார். கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொது மன்னிப்பு வழங்க மறுத்ததால் அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
அவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அப்துல் ரஹீமை மீட்க அவரது பெற்றோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். சிறுவனின் பெற்றோர் மன்னித்தால் அப்துல் ரஹீமை விடுவிக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்தது.
அப்போது மகன் இறப்புக்கு இழப்பீடு செய்யும் வகையில் 'பிளட் மணி' என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் (இந்திய மதிப்பில் ரூ34 கோடி) வழங்கினால் மன்னிக்க தயாராக இருப்பதாக சிறுவனின் பெற்றோர் கூறினர். அந்த தொகையை கடந்த ஏப்ரல் 16-ந்தேதிக்குள் ரூ.34 கோடியை வழங்கினால் அப்துல் ரஹீம் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது.
ஆனால் அவ்வளவு பெரிய தொகையை அப்துல் ரஹீமின் குடும்பத்தினரால் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்துல் ரஹீமை காப்பாற்ற தேவையான நிதியை திரட்ட சமூக சேவகர்கள் களமிறங்கினர். உலகம் முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினார்கள்.
இதன்மூலம் ரூ.34 கோடி வசூல் ஆனது. அந்த தொகை சவுதி அரேபியா கோர்ட்டில் குறிப்பிட்ட நாளுக்குள் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்துல் ரஹீம் விடுதலையாகும் சூழல் உருவானது. அவரது குடும்பத்தினர் வழங்கிய ரூ.34 கோடி கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், அப்துல் ரஹீமை மன்னிக்க தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அப்துல் ரஹீமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக ரியாத் குற்றவியல் நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மரணதண்டனை ரத்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டதால் சவுதி அரேபியா சிறையில் இருந்து அப்துல் ரஹீம் விடுதலையாகிறார். 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் நாளை விடுதலை செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.