முடிவுக்கு வருகிறது போராட்டம்: நாளை மறுதினம் வேலைக்கு திரும்பும் டாக்டர்கள்
- நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
- வரும் 21-ம் தேதி முதல் டாக்டர்கள் பணிக்கு திரும்புகின்றனர்.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் பெண் டாக்டர் கொலை தொடர்பாக நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்த கூட்டத்தில் ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி, கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட 3 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, ஜூனியர் டாக்டர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் மற்றும் வேலைநிறுத்தப் பணிகள் தொடரும். மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என தெரிவித்தனர்.
இதற்கிடையே, மேற்குவங்க அரசின் அதிகாரிகளுக்கும், ஜூனியர் டாக்டர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தைத் தொடர உள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜூனியர் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது. வரும் 21-ம் தேதி முதல் அவர்கள் பணிக்கு திரும்புகின்றனர்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், வெள்ளப் பிரச்சனை உள்ளது. நமக்குத் துணை நின்றவர்கள் ஏதேனும் பேரிடரை எதிர்கொண்டால், அவர்களுக்கு உதவ நாம் இருக்க வேண்டியது நமது கடமை. எனவே, இந்தப் போராட்டக் களத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளோம். சிஜிஓ வளாகம் வரை பேரணி நடத்துவோம். அபயாவுக்கு நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணையை துரிதப்படுத்தக் கோரி போராட்டம் நடத்துவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வந்து மாணவர்களின் குறைகளைக் கேட்கும் வகையில் மருத்துவமனைகளில் முறையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
இதன்மூலம் 40 நாட்களுக்கு மேலாக நடந்த டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வருகிறது.