இந்தியா

ஜி20 மாநாடு: எங்களைத் தாண்டி எதுவும் நுழைய முடியாது.. உச்சக்கட்ட பாதுகாப்பில் புது டெல்லி

Published On 2023-09-07 09:36 GMT   |   Update On 2023-09-07 09:36 GMT
  • உலகின் முக்கிய தலைவர்கள் டெல்லிக்கு வருகின்றனர்
  • பிரகதி மைதானத்தை சுற்றிலும் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது

சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், இந்தியா உட்பட உலகின் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஜி20.

இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு, இந்திய தலைநகர் புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும், அதிபர்களும் புது டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பிலும், விருந்தோம்பலிலும் எந்தவித குறைபாடுகள் இன்றி இரு நாட்களிலும் மாநாடு நடைபெற அரசு தரப்பில் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

பிரகதி மைதானத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காவல் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானங்கள் முதல் பட்டங்கள் கூட பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

புது டெல்லி காவல்துறையின் ரெயில்வே காவல் பிரிவு, மத்திய ரெயில்வே காவல்துறையுடன் இணைந்து டெல்லி ரெயில்வே நிலையம் அருகே ரோந்து பணிகளை மேற்கொண்டது. பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது.

புது டெல்லியின் மதுரா சாலை, பைரோன் சாலை, புரானா கிலா சாலை, பிரகதி மைதான் சுரங்க சாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 7 நள்ளிரவில் இருந்து செப்டம்பர் 10 வரை அனைவருக்குமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், மருந்து மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

செப்டம்பர் 8 காலை முதல் செப்டம்பர் 10 வரை புது டெல்லி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள், அவசரகால வாகனங்கள், மற்றும் விமான நிலையம், பழைய டெல்லி ரெயில்வே நிலையம் மற்றும் புது டெல்லி ரெயில்வே நிலையம் செல்லும் வாகனங்கள் ஆகியவை மட்டுமே அடையாளங்கள் உறுதியான பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும்.

இன்று (செப்டம்பர் 7) கோகுலாஷ்டமி விடுமுறையுடன், செப்டம்பர் 8-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 10-ம் தேதி வரை என தொடர்ந்து நான்கு நாட்களுக்கு புது டெல்லியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புது டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடத்தப்படுவதை பெருமையாக கொள்வதால், இத்தனை கட்டுப்பாடுகளையும் டெல்லி மாநகர மக்கள் வரவேற்கிறார்கள்.

Tags:    

Similar News