இந்தியா
null

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு- மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம்

Published On 2024-06-17 10:28 GMT   |   Update On 2024-06-17 10:42 GMT
  • விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவில் பிளேடு இருப்பதை கண்டுபிடித்ததாக பகிர்ந்துள்ளார்.
  • அதிகாரி ராஜேஷ் டோக்ரா உணவில் பிளேடு இருப்பதை உறுதிப்படுத்தினார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நோக்கி கடந்த ஜூன் 9ம் தேதி AI 175 என்கிற ஏர் இந்தியா விமானம் சென்றது.

இந்த விமானத்தில் பயணித்த பத்திரிக்கையாளர் மதுரஸ் பால் என்பவர், தான் அனுபவித்த வேதனையான அனுபவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவில் பிளேடு இருப்பதை கண்டுபிடித்ததாக குறிப்பட்டுள்ளார்.

மேலும், அவர், " ஏர் இந்தியாவின் இன்-ஃப்ளைட் கேட்டரிங் வழங்கும் அத்திப்பழ சாட் உணவில் பிளேடு இருப்பதை கண்டுபிடித்தேன். உணவு சாப்பிட்டபோது, அதை இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்ற நிலையில், ஏதோ கூர்மையான பொருள் தட்டுப்படவே வாயில் இருந்து எடுத்தபோது அது பிளேடு என்பதை உணர்ந்தேன்.

இதுதொடர்பாக விமான பணிப்பெண்ணிடன் புகார் அளித்தபோது, அவர் மன்னிப்புக் கேட்டதுடன், வேறு ஒரு கொண்டைக்கடலை உணவை கொண்டு வந்தார்.

எந்தவொரு விமானத்திலும் உணவில் பிளேடு இருப்பது ஆபத்தானது. இரண்டாவது, அது என் நாக்கை வெட்டக்கூடும். மூன்றாவதாக, ஒரு குழந்தை இந்த உணவை சாப்பிட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பினேன் என்றார்.

இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு புகார் அனுப்பிய நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் சில நாட்களுக்குப் பிறகு, பத்திரிக்கையாளருக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளது.

அதில் இழப்பீடாக "உலகில் எங்கு வேண்டும் என்றாலும் பயணிக்கும் வகையில் இலவச வணிக வகுப்பு பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு" வழங்கியதாகவும், ஆனால் அது லஞ்சம் வழங்குவதற்கு சமம் என்றும் அதை நிராகரித்ததாக குறிப்பிட்டார்.

மேலும், டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா, இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டு, தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா உணவில் பிளேடு இருப்பதை உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து ராஜேஷ் டோக்ரா கூறுகையில், "அந்த பிளேடு துண்டு கேட்டரிங் பார்ட்னர் பயன்படுத்தும் காய்கறி பதப்படுத்தும் இயந்திரத்தில் இருந்து வந்தது என்பதை கண்டறிந்துள்ளோம். செயலியை அடிக்கடி சோதனை செய்வது உட்பட, குறிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்" என்றார்.

Tags:    

Similar News