பிற்பகலுக்குள் விமான சேவை முழுமையாக சீரடையும்- மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்
- மென்பொருளை சார்ந்துள்ள தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் முடங்கின.
- நாட்டில் அனைத்து விமான நிலையங்களிலும் தற்போது விமான சேவை சீராகி வருகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். மைக்ரோசாப்ட்டின் 'விண்டோஸ்' மென்பொருளை எண்ணற்ற நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் 'விண்டோஸ்' மென்பொருள் இயங்குதளத்தில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது. அதனால் அந்த மென்பொருளை சார்ந்துள்ள தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் முடங்கின.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பாதிப்பு உணரப்பட்டது. இதற்கான காரணத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. எனினும் மைக்ரோசாப்ட்டிலோ அல்லது விண்டோசிலோ எந்த பாதிப்பும் இல்லை. 'கிரவுட்ஸ்டிரைக்' அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் கோளாறு காரணமாக இன்று 2-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் விமான சேவை இன்று பிற்பகலுக்குள் முழுமையாக சீரடையும். நாட்டில் அனைத்து விமான நிலையங்களிலும் தற்போது விமான சேவை சீராகி வருகிறது.
மைக்ரோசாப்ட் சேவையில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக பின்னடைவை சந்தித்த விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இணையதள பிரச்சனைகள் சீரானதை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.