ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக மத்திய மந்திரி மீது குற்றச்சாட்டு: சசிதரூருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
- சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.
- எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் தற்போதைய எம்.பியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் பன்னியன் ரவீந்திரன் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது. அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சசிதரூர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், ஓட்டு வாங்க பொதுமக்கள் மற்றும் பாதிரியார் உள்ளிட்ட கிறிஸ்வத தலைவர்களுக்கு பாரதிய ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
சசிதரூரின் இந்த கருத்துக்கு தன்மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.
இந்நிலையில் மத்திய மந்திரி மீது ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு விவகாரத்தில் சசிதரூருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.