ஜம்மு முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைப்பு
- ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை அமர்நாத் யாத்திரை
- இதுவரை 4.15 லட்சம் பத்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய 4-வது வருட தினத்தை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று ஜம்முவில் உள்ள முகாமிற்கு சென்றனர். அதிகாரிகள் காரணம் ஏதும் கூறாமல், யாத்திரை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந்தேதி மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது. அதோடு ஜம்மு-காஷ்மீரை இரண்டு மாநிலமாக பிரித்தது. அசாம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம், ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜம்முவிற்கு வரும் யாத்ரீகர்கள் என்ணிக்கை கடந்த ஒருவாரமாக குறைந்துள்ளதாகவும், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் யாத்ரீகர்களின் தினசரி பயணத்தை நிறுத்தி, மாற்று நாட்களில் மொத்தமாக அனுப்பி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை வழிபட கடந்த ஜூலை 1-ந்தேதியில் இருந்து யாத்ரீகர்கள் செல்கின்றனர். அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் வழியாக (48 கி.மீட்டர்), கந்தேர்பால் மாவட்டம் பல்தான் ட்ராக் (14 கி.மீட்டர்) வழியாகவும் இதுவரை 4.15 லட்சம் பேர் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். அமர்நாத் யாத்திரை வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.