புதிய பாராளுமன்றத்தில் சோழர் செங்கோல்- அமித்ஷா அறிவிப்பு
- டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
- 8ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார்.
புதுடெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியிருப்பதாவது:-
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை இணைக்க பாராளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்பட வேண்டியது அவசியம்.
8ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார். பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.
பாராளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது. அந்த செங்கோலை புதிய பாராளுமன்ற திறப்பு விழாவின்போது பிரதமரிடம் ஆதீனங்கள் ஒப்படைக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.