கேசிஆரை இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த ஆந்திர முதல்வர்
- பண்ணை வீட்டில் கீழே விழுந்த கேசிஆருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது
- ஜெகன் மோகன் ரெட்டியை கேசிஆர் இல்லத்தில் கேடிஆர் வரவேற்றார்
கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சியின் தலைவருமான கே சந்திரசேகர் ராவ் (KCR) தோல்வியடைந்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே 69 வயதான கேசிஆர், ஐதராபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் கீழே விழுந்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் பிரபல யசோதா மருத்துவமனைக்கு (Yashoda Hospital) மாற்றப்பட்டார்.
அங்கு பல்வேறு பரிசோதனைகளில் கேசிஆருக்கு இடுப்பெலும்பில் முறிவு இருப்பதாக கண்டறியப்பட்டு முழு இடது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. பின் நடை பயிற்சி மேற்கொண்ட அவருக்கு வலி வெகுவாக குறைந்து அனைத்து துறை மருத்துவ கண்காணிப்பில் சில நாட்கள் இருந்தார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து கேசிஆர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனது வீட்டிலேயே ஓய்வெடுக்கிறார்.
இந்நிலையில், ஓய்வில் உள்ள கேசிஆர்-ஐ ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவரது பஞ்சாரா ஹில்ஸ் (Banjara Hills) இல்லத்தில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
முன்னதாக முதல்வர் ஜெகன் மோகனை பிஆர்எஸ் கட்சியின் தற்போதைய தலைவர் கேடி ராமா ராவ், எம்பி ஜே சந்தோஷ் ராவ் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
விஜயவாடாவிற்கு திரும்பும் முன், கேசிஆர் இல்லத்தில் ஜெகன் மோகன் உணவருந்த உள்ளார் என தெரிகிறது.