ஆந்திர தேர்தல் பிரசாரம்: தெலுங்கு தேசம்-ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பயங்கர மோதல்
- தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.
- மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி-பா.ஜ.க. மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.
தற்போது ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன.
இந்நிலையில் பல்நாடு மாவட்டம், நரச ராவ் பேட்டை தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சதல வாடா அரவிந்த் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
அப்போது 2 கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 கட்சியினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
மேலும் காயமடைந்தவர்களை மீட்டு நரசராவ் பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.