எந்த EVM இயந்திரத்தையும் சோதிக்கலாம்.. தோற்ற வேட்பாளர்களுக்கு சலுகைகளை அடுக்கிய தேர்தல் ஆணையம்
- மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்
- சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் இவிஎம் மின்னணு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் மின்னணு இயந்திரங்களை ஒழித்து வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டது.
இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடப்பது நிரூபிக்கப்படாததால் இந்த மனுவை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அதற்கு பதிலாக தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியைத் தழுவும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் பணம் செலுத்தி விண்ணப்பித்து இவிஎம் இயந்திரங்களை சோதனையிடலாம் என்று தெரிவித்திருந்தது.
அதன்படி நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு காட்சிகளை சேர்ந்த மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வேட்பாளர்கள் தங்களின் தொகுதியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட எந்த இவிஎம் இயந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். எந்த இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்ற வேட்பளர்களின் முடிவில் அதிகாரிகளின் தலையீடு இருக்காது.
தேர்தெடுக்கப்பட்ட இவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தி அதிகபட்சமாக 1400 வாக்குகள் செலுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்தி அவை சரியாக இயங்குகிறதா என்று என்று சோதிக்கலாம். அதிகப்பாடசாமாக வேட்பாளர்கள் தங்களின் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும்.
இவிஎம் இயந்திரமானது பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் [விவிபேட்] யூனிட்டை உள்ளடிக்கியது. இந்த யூனிட்களை வெவ்வேறு இயந்திரங்களில் இடைமாற்றியும் [ஒரு இவிஎம் இயந்திரத்தில் உள்ள பேலட் யூனிட்டையும் மற்றொரு இயந்திரத்தில் உள்ள விவிபேட் யூனிட்டையும்] இணைத்து சோதித்து பார்க்கலாம்.
ஆனால் ஒரு தொகுதியில் மொத்தம் 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் ஒரு இவிஎம் இயந்திரத்தை மட்டுமே சோதிக்க முடியும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி விரைவில் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி இவிஎம் இயந்திரங்கள் சோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.