தஞ்சமடையும் மியான்மர் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு உதவியை நாடும் மிசோரம்
- மிசோரமில் இனக்குழுக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.
- ராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதால், மிசோரமில் தஞ்சம் அடைகிறார்கள்.
மியான்மரில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ஆயுதமேந்திய இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. ஒரு சில நகரங்களில் இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்து ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றன.
இதனால் ராணுவம் இனக்குழுக்களை எதிர்த்து போரிட முடியவில்லை. அவர்களிடம் சரணடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மியான்மர் ராணுவ வீரர்கள் உயிருக்கு பயந்து இந்தியாவிற்கு ஒடி வருகின்றனர். எல்லையில் உள்ள மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களை அடிக்கடி வெளியேற்றும் முயற்சிகளை மிசோரம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியாவின் மிசோரம் மாநிலத்திற்குள் வந்துள்ளனர்.
இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மிசோரம் அரசு கவலை அடைந்துள்ளது. இதனால் அவர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
வடகிழக்கு கவுன்சில் கூட்டம் ஷில்லாங்கில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மிசோரம் முதல்வர் லால்துஹொமா விவரமாக எடுத்துக் கூறியதாக தெரிகிறது.
அப்போது, உடனடியாக மியான்மர் ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமித் ஷாவிடம் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து லால்துஹோமா கூறுகையில் "மியான்மரில் இருந்து மக்கள் தஞ்சம் கேட்டு எங்கள் மாநிலத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறோம். முன்னதாக இங்கு வந்து அடைக்கலம் கேட்டு தங்கியிருந்த ராணுவ வீரர்களை நாங்கள் விமாங்கள் மூலம் அங்கு திருப்பி அனுப்பி வைத்தோம். சுமார் 450 வீரர்களை அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.