கொனார்க் கோவிலின் காலசக்கர பின்னணியில் தலைவர்களை வரவேற்ற மோடி
- 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவ அரசரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது
- இந்தியாவின் மூவர்ணக்கொடியின் மத்தியிலும் இச்சக்கரம் இடம்பெற்றுள்ளது
உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுடன் இந்தியா உட்பட 19 உலக நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய ஒரு பன்னாட்டு நாடுகளின் கூட்டமைப்பு ஜி20.
இக்கூட்டமைப்பின் தலைமை இம்முறை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இம்மாநாடு நாளை வரை நடைபெற இருக்கிறது.
இதில் பங்கேற்க இக்கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகளை சேர்ந்த பெரும்பாலான உலக தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக அம்மையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய முறைப்படி கைகளை கூப்பி வரவேற்றார்.
பிரதமர் மோடி நின்று வரவேற்ற இடத்திற்கு பின்னால் ஒடிசா மாநில பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற சூரிய பகவான் கோவிலிலிருக்கும் கொனார்க் சக்கரத்தின் பிரதி அமைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவன் மன்னரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது.
ஒடிசாவின் சூரியபகவான் கோவிலில் உள்ள இச்சக்கரம், பண்டைய இந்தியர்களின் அறிவாற்றலையும், முன்னேறிய நாகரிக வளர்ச்சியையும், கட்டிட மற்றும் சிற்பக் கலைகளில் அவர்களுக்கிருந்த நுண்ணறிவையும் பறைசாற்றும் விதமாக இருப்பதாக உலகம் முழுவதும் புகழ் பெற்றது.
வளர்ச்சியயும் முன்னேற்றத்தையும் குறிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட இச்சக்கரத்தில் உள்ள 24 ஆரக்கால்கள் (spokes) ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை குறிக்கும்.
ஜனநாயகத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும், சமூக முன்னேறத்திற்கான உறுதியான நோக்கத்தையும் இந்த சக்கரம் பிரதிபலிக்கிறது என்பதும் இந்திய தேசிய கொடியாகிய மூவர்ணக்கொடியின் மத்தியிலும் இச்சக்கரத்தின் பிரதி இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.