இந்தியா

சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக பா.ஜனதாவை எதிர்த்து கருத்து தெரிவித்த அசோக் கெலாட்

Published On 2023-08-17 04:17 GMT   |   Update On 2023-08-17 04:17 GMT
  • சச்சின் பைலட்டின் தந்தை குறித்து பா.ஜனதாவின் மால்வியா விமர்சனம்
  • ஒட்டு மொத்த நாடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கெலாட் வலியுறுத்தல்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர். இளம் வயதுடைய சச்சின் பைலட் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மேலிடம் அசோக் கெலாட்டை முதல்வராக தேர்வு செய்தது.

இதனால் இருவருக்கும் இடையில் ஒரு மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த மோதல் போக்கு சில வருடங்களுக்கு முன் வெளிப்படையாக வெடிக்க, சச்சின் பைலட் காங்கிரசில் தனதுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.-க்களை திரட்டி கெலாட்டிற்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால், கெலாட் திறம்பட செயல்பட்டு தனது ஆதரவை நிலைநிறுத்திக்கொண்டார்.

பின்னர், மேலிடம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. அதன்பின் அடிக்கடி மோதல் ஏற்பட்ட போதிலும், இந்த வருட இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டபை தேர்தலும், அடுத்த ஆண்டு மத்தியில மக்களவை தேர்தல் வருவதாலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.

சமீப காலமாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வன்முறை குறித்து அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். பா.ஜனதவினர் அதற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியையும், சச்சின் பைலட் தந்தையையும் பற்றி பா.ஜனதா சமூக வலைத்தள பிரிவு தலைவர் அமித் மால்வியா ஒரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில் மால்வியா, ''ராஜேஷ் பைலட் (சச்சின் பைலட் தந்தை), சுரேஷ் கல்மாடி ஆகியோர் இந்திய போர் விமானம் மூலம் கடந்த 1966-ல் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் வெடிகுண்டுகளை வீசினர். பின்னர், இருவரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகி, மந்திரி சபையில் இடம் பிடித்தனர். வடகிழக்கு மாநிலத்தின் சொந்த மக்கள் மீது குண்டுகள் வீசியதற்கு பரிசாக இந்திரா காந்தி அரசியலில் இடம் வழங்கினார் என்பது தெளிவாக தெரிகிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சச்சின் பைலட் ''நீங்கள் தவறான தேதி மற்றும் தவறான சம்பவத்தை சொல்கிறீர்கள். ஆமாம். இந்திய விமானப்படை விமானியான எனது தந்தை குண்டுகளை வீசினார். ஆனால், இந்தியா- பாகிஸ்தான் போரின்போது, கிழக்கு பாகிஸ்தானில் வீசினார். நீங்கள் சொல்வதுபோல் 1966-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி மிசோரமில் அல்ல. எனது தந்தை 1966-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதிதான் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். ஜெய் ஹிந்த்'' என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் அசோக் கெலாட், ''இந்திய விமானப்படையில் காங்கிரஸ் தலைவரான ராஜேஷ் பைலட் தைரியமான விமானியாக திகழ்ந்தார். அவர்களை இழிவுப்படுத்துவது, பா.ஜனதா இந்திய விமானப்படையில் தியாகம் செய்தவர்களை இழிவுப்படுத்துவதாகும். ஒட்டுமொத்த நாடும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News