தேர்தல் பத்திரம் விவகாரம்: எஸ்பிஐ வங்கிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
- தேர்தல் பத்திரம் செல்லாது, வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
- நன்கொடையாளர்களின் விவரங்களை கொடுக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
அதோடு தேர்தல் பத்திரம் வினியோகத்தை எஸ்பிஐ வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும். நன்கொடை அளித்தவர்கள் விவரம், ஒவ்வொரு கட்சிகளுக்கும் யார் யார் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளனர் என்பது தொடர்பான முழு விவரங்களையும் எஸ்பிஐ வங்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் அதனுடைய அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஆனால் எஸ்பிஐ வங்கி, உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த காலத்திற்குள் அளிக்க முடியவில்லை. ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. யாரை காப்பாற்றுவதற்கு காலஅவகாசம் கேட்கிறது என கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் எஸ்பிஐ வங்கிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிக்கு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எஸ்பிஐ வேண்டுமென்றே அவமதிப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மனுவை பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.