விவசாயக் கழிவுகள் எரிப்பு: 80% குறைத்த பஞ்சாப்- மற்ற மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மத்திய அரசு மீது அதிஷி சாடல்
- காற்று மாசால் டெல்லி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
- பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவு.
தீபாவளி பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. தற்போது மிகமிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மாஸ்க் அணிந்துதான் வெளியில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
காற்று மாசுக்கு முக்கியமான காரணம் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் அதாவது அறுவடை முடிந்தபின் சோளம் போன்ற கதிர்களின் தண்டுகள் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதுதான். இதன் மூலமாக காற்றில் புகை கலந்து மாசு ஏற்படுகிறது.
விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் கடுமையாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருந்த போதிலும் கழிவுகள் எரிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் 80 சதவீதம் அளவிற்கு விவசாயக்கழிவுகள் எரிக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அதிஷி மத்திய அரசை சாடியுள்ளார்.