ஆட்டோ மேற்கூரையில் பசுமை பூந்தோட்டம்... ஜில்லென்ற காற்றில் சுகமான பயணம்
- ஆட்டோ மீது பூச்செடிகள் வளர்ந்துள்ளதால் ஆட்டோவில் உள்பகுதியில் குளுமையாக உள்ளது.
- அஞ்சுக்கு அதிக அளவில் சவாரி கிடைப்பதால் கணிசமான அளவில் வருமானம் ஈட்டி வருகிறார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத்தை சேர்ந்தவர் அஞ்சி. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
வாகன பெருக்கத்தின் காரணமாக சுற்றுச்சூழல் மாசு அடைந்து வருவதால் வித்தியாசமாக ஏதாவது செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினார்.
அதன்படி அஞ்சு தனது ஆட்டோவின் மேற்கூரையில் வித்தியாசமான முறையில் பல்வேறு பூச்செடிகளை நட்டு நகரும் தோட்டம் அமைத்து உள்ளார். அஞ்சுவின் ஆட்டோ மேற்கூரையில் பூச்செடிகள் பூத்து குலுங்குவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
வித்தியாசமான முறையில் ஆட்டோ மீது பூந்தோட்டம் அமைத்துள்ளதை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்க்கின்றனர். மேலும் அவரது ஆட்டோவில் உள்பகுதியில் மின்விசிறியும் பொருத்தியுள்ளார்.
இவரது ஆட்டோ மீது பூச்செடிகள் வளர்ந்துள்ளதால் ஆட்டோவில் உள்பகுதியில் குளுமையாக உள்ளது.
அஞ்சுவின் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு வெப்பம் தெரியாமல் சில்லென்ற காற்று வீசுவதால் பயணிகள் இவரது ஆட்டோவில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
அஞ்சுக்கு அதிக அளவில் சவாரி கிடைப்பதால் கணிசமான அளவில் வருமானம் ஈட்டி வருகிறார். தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் அஞ்சுவுவின் ஆட்டோவில் பயணிக்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என கூறப்படுகிறது.
அஞ்சுவை அப்பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். இவரது ஆட்டோவின் படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.