'பப்ஜி' விளையாட்டு மூலம் விழிப்புணர்வு- பெங்களூரு போக்குவரத்து போலீசாரின் புதிய முயற்சி
- போக்குவரத்து விதிமுறைகள் மீறுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- இளம் வயதினர் விரும்பி விளையாடும் ‘பப்ஜி’ விளையாட்டு மூலம் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. நகரின் எந்த சாலைக்கு சென்றாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காதது தான்.
இதனால், போக்குவரத்து விதிமுறைகள் மீறுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் பலர் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக தெரிகிறது. இதனால், அந்த வயது பிரிவினரை இலக்காக கொண்டு பெங்களூரு போக்குவரத்து போலீசார் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.
அதாவது இளம் வயதினர் விரும்பி விளையாடும் 'பப்ஜி' விளையாட்டு மூலம் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 'பேட்டில் கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா' (பப்ஜி) விளையாட்டில் வீரர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்வது போன்றும், 'மச்சா புட் ஆப் ஹெல்மெட் டா' (ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவது) என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இளம் வயதினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.