சித்தூரில் இரு கட்சிகள் மோதலால் பந்த்: வேலூர்-ஆந்திரா பஸ்கள் ஓடவில்லை
- பந்த் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் ஓடவில்லை.
- வேலூர் வழியாக திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திரா அரசின் பாசன நீர் மேலாண்மை திட்டப் பணிகளை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சந்திரபாபு நாயுடு பயணத்தை தடுத்து நிறுத்துவோம் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி புங்கனூர் பகுதிக்கு வந்த சந்திரபாபு நாயுடுவை குறபலக்கோட்டா பகுதியில் தடுத்து நிறுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் காத்திருந்தனர்.
அதே நேரத்தில் அந்தப் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினரும் குவிந்தனர். திடீரென அங்கு மோதல் ஏற்பட்டது.
2 கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு சோடா பாட்டில், பீர் பாட்டில் ஆகியவற்றால் தாக்கிக் கொண்டனர். தொண்டர்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தினர். தடியடியில் 2 கட்சிகளையும் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஆவேசம் அடைந்த கட்சித் தொண்டர்கள் போலீசாரின் 2 வாகனங்களை கவிழ்த்து தீ வைத்தனர். தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் 2 போலீசாருக்கு மண்டை உடைந்தது. 50 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தொண்டர்களை விரட்டியடித்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் போர்க்களமாக காட்சி அளித்தது.
இந்நிலையில் அங்கு வந்த சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டிக்கு சவால் விடுக்கும் வகையில் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பேசினார்.
அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி நேருக்கு நேர் வந்தால் மோதிப் பார்த்து கொள்ளலாம் என்று சந்திரபாபு நாயுடு சவால் விட்டார்.
இதனால் பதற்றம் ஏற்பட்டது. சந்திரபாபு நாயுடுவை சுற்றி நின்று சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்தனர். பின்னர் சந்திரபாபு நாயுடுவை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
வன்முறை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சித்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக சித்தூர் நகர பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் அனைத்து பஸ்கள் வாகனங்கள் சித்தூர் மாவட்டத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.
பந்த் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் ஓடவில்லை. வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.
ஆந்திர மாநில அரசு பஸ்கள் 56 மற்றும் தமிழக போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 12 அரசு பஸ்கள் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் வேலூர் வழியாக திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் காட்பாடி சென்று அங்கிருந்து ரெயில் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர்.
இதுபோல திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர். அவர்கள் திருப்பதி ரெயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்துள்ளனர். ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்று மாலைக்கு பிறகு இயல்பு நிலை திரும்பிவிடும் அதன் பிறகு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.