இந்தியா

பா.ஜ.க.- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பயங்கர மோதல்

Published On 2024-08-28 09:21 GMT   |   Update On 2024-08-28 09:21 GMT
  • பெண் டாக்டர் கொலையை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.
  • கொல்கத்தா நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ந்தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். பெண் டாக்டர் கொலையை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி கொல்கத்தாவில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மாணவ அமைப்பினர் அறிவித்தனர்.

அதன்படி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா நகரம் நேற்று போர்க்களம் போல் காட்சியளித்தது.


இந்த நிலையில் மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டதை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்புக்கு மாநில பாஜக அழைப்பு விடுத்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக கொல்கத்தாவில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. அங்கு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரசு பஸ் டிப்போ, மெட்ரோ நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்ட னர். இதேபோல் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பாஜகவின் முழு அடைப்பு போராட்டத்தை தோல்வி அடைய செய்ய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.


முழு அடைப்பின் போது பஸ்கள் மீது கற்கள் வீசப்படும் என்ற சூழல் நிலவியதால் டிரைவர்கள், நடத்துனர்கள் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டத்தை பாஜக.வினர் தொடங்கினர்.

அதே வேளையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. டிரைவர்கள், நடத்துனர்கள் ஹெல்மெட் அணிந்தபடி பஸ்களை இயக்கினர்.

அதே போல் மற்ற வாகனங்கள் இடையூன்றி செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் மேற்கு வங்காளம் முழுவதும் காலை முதல் பஸ் சேவை பாதிக்கப்பட்டன. கொல்கத்தாவில் குறைந்த அளவில் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயக்கப்பட்டன. இன்று அதிகாலை ஹூக்ளி ரெயில் நிலையத்தில் பாஜகவினர் மறியல் செய்தனர்.

பராக்பூரில், பாஜகவினர் ரெயில்களை மறித்தனர். இதனால் உள்ளூர் ரெயில்கள் பல்வேறு வழித் தடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன. கொல்கத்தாவில் சில கடைகள், மார்க்கெட்டுகள் வழக்கம் போல் திறந்திருந்தது.

ஆனால் முழு அடைப்பு காரணமாக மோதல் சம்பவங்கள் நடைபெறும் என்பதால் கொல்கத்தாவில் மக்கள் வெளியே வர வில்லை. மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் தனியார் வாகனங்கள் ஓடவில்லை. இதனால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

சிலிகுரி, பிதான்நகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது.


முழு அடைப்பு அறிவிப்பையடுத்து பாஜகவினர் இன்று காலை முதலே சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜகவினர் பொது மக்களை தடுத்து நிறுத்தி வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க முழு அடைப்பில் பங்கெடுக்க வேண்டும் என்றும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டனர்.

அவர்கள் சாலைகளில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் போராட்டம் நடத்த வந்த பாஜக கட்சியினரை தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கூச் பெஹார் பகுதியில் போராட்டம் நடத்த சென்ற 2 பாஜக எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கொல்கத்தாவின் பாட்டா சவுக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் லாக்கெட் சட்டர்ஜியை போலீசார் கைது செய்தனர். அப்போது எத்தனை பேரை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அதிகமானோர் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று சாட்டர்ஜி கூறினார்.

இதேபோன்று மாநிலம் முழுவதும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும் மாணவர் தலைவர் சயான் லஹிரியும் கைது செய்யப்பட்டார்.

பாஜகவின் முழு அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பந்த் அனுசரிக்க வேண்டாம் என்று வியாபாரிகளை கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையே பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வடக்கு 24 பர்கானாஸ், அலிபுர்து வார் உள்ளிட்ட இடங்களில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது. இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடிக்கும் சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

மோதலில் ஈடுபட்ட இரு கட்சியினரையும் போலீசார் விரட்டியடித்தனர். சிலரை பிடித்து சென்றனர். இதே போல மாநிலம் முழுவதும் இரு கட்சி தொண்டர்கள் இடையே மோதல் சம்பவங்கள் அதிகளவில் ஏற்பட்டது. இதை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் பாஜக தலைவர் பிரியங்கு பாண்டே கூறும்போது, வடக்கு 24 பர்கானாசின் பட்பாராவில் இன்று அதிகாலை எனது கார் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டினார்.

மேலும் பாஜக நிர்வாகிகள் நேதா அர்ஜுன் சிங், பிரியங்கு பாண்டே ஆகியோர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கூறும்போது, உயர்நிலைப் பள்ளிகளை பாஜகவினர் வலுக்கட்டாயமாக மூடுகின்றனர். மேற்கு வங்காளம் உங்களை ஏன் புறக்கணிக்கிறது என்பதை வலுப்படுத்தியதற்காக பாஜகவுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

பாஜகவின் இந்த 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தால் மேற்கு வங்காளத்தில் இயல்பு வாழ்க்கை சிறிய அளவில் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News