ரோகிங்யா அகதிகள் பிரச்சினை- இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கும் வங்காளதேசம்
- ஷேக் ஹசீனாவுடன், கவுதம் அதானி சந்திப்பு.
- மம்தா பானர்ஜியை சந்திப்பேன் என ஹசீனா தகவல்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தார். அவரை வெளியுறவுத்துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இதையடுத்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி வங்களாதேச பிரதமரை சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ஆலியா தர்காவுக்கு சென்ற ஹசீனா வழிபாடு நடத்தினார். பின்னர் வங்காளதேச தூதரகத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, மியான்மர் நாட்டில் இருந்து தப்பி தற்போது வங்கதேசத்தில் வசித்து வரும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோகிங்கியா அகதிகள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், இந்தியா ஒரு பெரிய நாடு, ரோகிங்கியா அகதிகள் பிரச்சினையை சமாளிக்க வங்களாதேசத்திற்கு இந்தியா நிறைய உதவ முடியும். இரு நாடுகளும் ஒன்றிணைந்து எல்லை தாண்டி ஓடும் நதிகளை புத்துயிர் பெறச் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
அந்த ஆறுகளை தூர்வாரினால் அவற்றின் நீரோட்டம் இன்னும் மேம்படும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். அவர் எனக்கு ஒரு சகோதரி போன்றவர், நான் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்திக்க முடியும்.நாங்கள் எப்போதும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடியுடன், ஹசீனா பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார்.