இந்தியா

பீகார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

Published On 2024-01-28 05:51 GMT   |   Update On 2024-01-28 06:38 GMT
  • முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
  • இதையடுத்து, நிதிஷ்குமார் ராஜ்பவன் சென்று ஆளுநரைச் சந்தித்தார்.

பாட்னா:

பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.

கடந்த 13-ம் தேதி டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமாரை தேர்வு செய்யலாம் என அனைத்துக் கட்சிகளும் சொன்ன நிலையில் ராகுல் அதை நிராகரித்தார். இது தனக்கு ஏற்பட்ட அவமதிப்பாக நிதிஷ்குமார் கருதினார்.

இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவு செய்தார். மேலும் கடந்த 2 ஆண்டாக ஆதரவு பெற்று வந்த லல்லு பிரசாத் யாதவ் கட்சியுடனான தொடர்பை துண்டிக்கவும் தீர்மானித்தார். அதே சமயத்தில் மீண்டும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல் மந்திரி பதவியை தொடரவும் திட்டமிட்டார்.


இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பீகார் அரசியலில் கடுமையான பரபரப்பு நிலவியது. நிதிஷ்குமாரை சமரசம் செய்ய காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இது இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

நிதிஷ்குமாரிடம் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த பாரதிய ஜனதா கட்சி மேலிடம் அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் நட்டா இருவரும் அடுத்தடுத்து நிதிஷ்குமாருடன் பேசி அவரை தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து நேற்று பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 தடவை கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக முதல் மந்திரி நிதிஷ்குமார் கூட்டணி தொடர்பாகவோ, ஆட்சி மாற்றம் தொடர்பாகவோ எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் ஒப்புதல் வழங்கினர். நிதிஷ்குமார் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு ஒத்துழைப்பு தருவதாக எம்.எல்.ஏ.க்கள் உறுதி அளித்தனர்.

நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர்.

அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.

பீகாரில் மொத்தமுள்ள 243 எம்.எல்.ஏ.க்களில் ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. பாரதிய ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு 127 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது.

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களைப் பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.

அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைப்பதாகக் கூறி கடிதங்களைக் கொடுத்தார். அதையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நிதிஷ்குமார் 9-வது முறையாக பீகார் முதல் மந்திரியாக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.

இன்று மாலை நிதிஷ்குமார் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ்குமார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக பீகார் அரசியலில் இன்று அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் மீண்டும் ஒன்றிணைந்து புதிய ஆட்சியை அமைக்கின்றன. இதன்மூலம் பீகாரில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் நிதிஷ்குமாரை சேர்ப்பதற்கு சிராக் பஸ்வான் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரை டெல்லிக்கு அழைத்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் பா.ஜ.க. கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்தால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சிராக் பஸ்வான் அறிவித்திருப்பது பீகார் அரசியலில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா , நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் கட்சி மற்றும் சில கட்சிகள் ஒருங்கிணைவதன் மூலம் பீகாரில் இந்தக் கூட்டணி வலிமையானதாக மாறி உள்ளது

Tags:    

Similar News