மக்கள் பயன்பெறுவதை பா.ஜனதா விரும்புவதில்லை: ED சோதனை, சம்மனுக்கு அசோக் கெலாட் பதிலடி
- ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை
- அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன்
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 25-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், FEMA வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் நாளை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் வழங்கியுள்ளது.
இதுதொடர்பான அசோக் கெலாட் கூறியதாவது:-
நேற்று, காங்கிரஸ் ராஜஸ்தான் பெண்களுக்கான உத்தரவாதத்தை வெளியிட்டது. இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, எனது மகனுக்கு ஆஜராகும்படி சம்மன் நடவடிக்கை.
ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், பெண்கள், விவசாயிகள், ஏழை மக்கள் காங்கிரஸின் உத்தரவாதத்தின் பலன்களை பெறுவதை பா.ஜனதா விரும்பவில்லை. நான் என் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்'' என்றார்.
நேற்று நடைபெற்ற பேரணியின்போது, அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும்'' என வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.