இந்தியா

பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் யார்?

Published On 2024-10-18 06:37 GMT   |   Update On 2024-10-18 06:37 GMT
  • தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
  • இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்கினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 15-ந்தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்கினர். அவர்கள் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் படங்கள் அடங்கிய பிரசார போஸ்டர்கள் மற்றும் பேனர்களை அமைத்தனர். மேலும் பிரசாரம் மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகளையும் தொடங்கினர்.


தேர்தல் பணிகளை தொடங்குவதில் காங்கிரஸ் கட்சியினர் முதலில் களமிறங்கிய நிலையில், தேர்தல் களம் காண இருக்கும் பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியையே மேற்கொண்டு வந்தது.

இந்தநிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை இடது ஜனநாயக முன்னணி நேற்று மாலை அறிவித்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார். இவர் கடந்த 1987-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை 3 முறை கண்ணூர் மற்றும் நாதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்தநிலையில் தற்போது அவருக்கு வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், பாரதிய ஜனதா மட்டும் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இடைத்தேர்தலில் யாரை நிறுத்துவது? என்று தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

வேட்பாளர் தேர்வுக்கான இறுதி பட்டியில் கட்சியின் தலைமையிடம் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரது பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இடைத்தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News