இந்தியா

தமிழ்நாட்டில் பிரதான கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் -ஜே.பி.நட்டா

Published On 2024-07-10 04:13 GMT   |   Update On 2024-07-10 04:13 GMT
  • தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.
  • கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதன்மூலம் கேரளாவில் கால்பதித்த பெருமையை அக்கட்சி பெற்றது.

அது மட்டுமின்றி கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை விட, தற்போது நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீத மும் அதிகரித்தது. இதனால் கேரள மாநி லத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெரும்பான்மையான வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் பா.ஜ.க. செயல்படத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் பா.ஜ.க. புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

அதில் பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியுமான ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் மற்றம் குடும்ப அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் அதிகாரத்தை பெற பொய் தகவல்களை பரப்புகின்றன. அந்த கட்சிகள் பா.ஜ.க.வை வடமாநில கட்சி போல் சித்தரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டன.

ஆனால் அவை அனைத்தும் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் உடைத்தெறியப்பட்டது. இந்த தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முன்பைவிட அதிக வாக்குகளை பா.ஜ.க. பெற்றது. தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையை பெற்றார்.

திருவனந்தபுரம் மற்றும் அட்டிங்கல் தொகுதியில் தோல்வியடைந்தாலும் பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 6 மாநகராட்சிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது வெற்றிக்கு சமம்.

கேரளாவில் எதிர் அணியாகவும், அகில இந்திய அளவில் ஒரே அணியாகவும் பயணிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் காலாவதியான கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனர். இங்கு பா.ஜ.க.வினர் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர்.

2016-ம் ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

Tags:    

Similar News